இந்திய கால்பந்து பயிற்சியாளர் விலகல்

புதுடில்லி: இந்திய கால்பந்து பயிற்சியாளர் மனோலோ மார்கஸ் பதவி விலகினார்.
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்பெயினின் மனோலோ மார்கஸ் 56, 3 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார். இவர், 2020 முதல் இந்தியாவில் ஐ.எஸ்.எல்., தொடர் பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் 2021-211ல் ஐதராபாத், கோப்பை வென்றது. இதனால் இந்திய அணி சர்வதேச அரங்கில் மீண்டு வரும் என நம்பப்பட்டது.
ஆனால் மார்கஸ் பயிற்சியில், இந்தியா பங்கேற்ற 8 போட்டியில் 4 'டிரா' செய்து, 3ல் தோற்றது. மாலத்தீவு அணிக்கு எதிராக மட்டும் ஒரு வெற்றி பெற்றது. இதனால் ஓய்வு பெற்ற சுனில் செத்ரியை மீண்டும் அழைக்க நேர்ந்தது. தரவரிசையில் பின் தங்கிய வங்கதேசம், ஹாங்காங் அணிக்கு எதிராக தோற்ற இந்தியா, 2027 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
கடந்த 2018ல் 97வது இடத்தில் இருந்த இந்திய அணி, தரவரிசையில் 127 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து இருதரப்பிலும் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், 2 ஆண்டு மீதம் உள்ள போதும், மார்கஸ் பதவி விலகினார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில்,' இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து மார்கஸ் விடுவிக்கப்பட்டார். புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,' என தெரிவித்துள்ளது.

Advertisement