அஷ்வின் அசத்தல்: திண்டுக்கல் கலக்கல்

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தொடரின் 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. அஷ்வின் 'ஆல் ரவுண்டராக' அசத்தினார்.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.
வருண் 'இரண்டு'
திருச்சி அணிக்கு சுரேஷ் குமார் (23), வாசீம் அகமது ஜோடி துவக்கம் கொடுத்தது. போட்டியின் 10 வது ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி, திருச்சி அணிக்கு இரட்டை அடி கொடுத்தார். 2வது பந்தில் ஜெகதீசனை (9) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் சஞ்சயை (1) வெளியேற்றினார். கேப்டன் அஷ்வின், ராஜ்குமாரை 'டக்' அவுட்டாக்கி அனுப்பி வைத்தார்.
41 பந்தில் 36 ரன் எடுத்த வாசீம், ரன் அவுட்டானார். அஷ்வின் வீசிய 19 வது ஓவரில் ஜாபர் ஜமால் (33), செல்வகுமரன் (0) அவுட்டாகினர். திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது. அஷ்வின் 3, வருண் 2, பெரியசாமி 2 விக்கெட் சாய்த்தனர்.
அஷ்வின் '83'
திண்டுக்கல் அணிக்கு அஷ்வின், ஷிவம் (16) ஜோடி துவக்கம் தந்தது. அஷ்வின் 48 பந்தில் 83 ரன் விளாச, வெற்றி எளிதானது. திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம்-திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால், பைனலில் (ஜூலை 6) திருப்பூர் அணியை சந்திக்கலாம்.