இந்திய பெண்கள் இரண்டாவது வெற்றி * அமன்ஜோத், ஜெமிமா விளாசல்

பிரிஸ்டல்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி பிரிஸ்டலில் நடந்தது. காயத்தில் இருந்து மீண்ட ஹர்மன்பிரீத் கவுர், கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சிவர், பீல்டிங் தேர்வு செய்தார்.
இரண்டு அரைசதம்
இந்திய அணிக்கு ஷபாலி (3), ஸ்மிருதி ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. ஸ்மிருதி 13 ரன் எடுத்தார். ஹர்மன்பிரீத் கவுர் (1) வந்த வேகத்தில் வெளியேறினார். இந்திய அணி 31/3 என திணறியது. அடுத்து ஜெமிமா, அமன்ஜோத் கவுர் இணைந்தனர். துவக்கத்தில் இருவரும் நிதானம் காட்ட, இந்தியா 10 ஓவரில் 64/3 ரன் எடுத்தது.
ஆர்லட் வீசிய 11வது ஓவரில் ஜெமிமா, 6, 4, 4, என தொடர்ந்து விளாசினார். லாரென் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜெமிமா, 32 பந்தில் அரைசதம் எட்டினார். மறுபக்கம் அமன்ஜோத், தன் பங்கிற்கு பவுண்டரிகளாக அடிக்க, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 4வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது ஜெமிமா (63 ரன், 41 பந்து) அவுட்டானார்.
அமன்ஜோத் 35 பந்தில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 20 ஓவரில் 181/4 ரன் எடுத்தது. அமன்ஜோத் (63), ரிச்சா (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
டாமி ஆறுதல்
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் நாட் சிவர் (13) ஏமாற்றம் தர, டாமி பியுமண்ட் (54) அரைசதம் அடித்து ரன் அவுட்டானார். அமி ஜோன்ஸ் (32), சோபி (35) கைகொடுத்த போதும், வெற்றிக்கு போதவில்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 157/7 ரன் மட்டும் எடுத்து, இம்மைதானத்தில் முதன் முறையாக தோல்வியடைந்தது. 24 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது.

ஸ்மிருதி '150'

சர்வதேச 'டி-20' அரங்கில் 150 போட்டியில் பங்கேற்ற முதல் இடதுகை பேட்டர் என சாதனை படைத்தார் இந்தியாவின் ஸ்மிருதி. அத்தபத்து (146, இலங்கை), பிஸ்மா (140, வங்கதேசம்) அடுத்து உள்ளனர்.
* இந்திய வீராங்கனைகளில் ஹர்மன்பிரீத் கவுர் (170), ஸ்மிருதி (150), தீப்தி (125) முதல் 3 இடத்தில் உள்ளனர்.
* இந்திய அளவில் ஹர்மன்பிரீத் கவுர் (170), ரோகித் சர்மா (159), ஸ்மிருதி (150) அதிக 'டி-20' ல் பங்கேற்றுள்ளனர்.

Advertisement