'சரளா காவிரி' திட்டம் மக்களிடம் வரவேற்பு

பெங்களூரு; வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும், 'சரளா காவிரி' திட்டத்திற்கு 10,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

பெங்களூரில் நிலத்தடி நீர் மட்டம் 200 அடியிலிருந்து 1,000 அடியாக குறைந்து உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, வீடுகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கும், 'சரளா காவிரி' திட்டத்தை பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் துவங்கியது.

இத்திட்டம் கடந்த மே 9ம் தேதி துவங்கப்பட்டது. 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு பெறுவது சுலபமாக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் மொத்த கட்டண தொகையில் 20 சதவீதம் மட்டும் செலுத்தினாலே இணைப்பு வழங்கப்படும்.

மீதமுள்ள தொகையை தவணை முறையில் 12 மாதங்களில் செலுத்தலாம். இதில், குடியிருப்பு வாசிகள் மட்டுமே பங்கு பெற முடியும். தொழில்துறை, வணிக கட்டடங்களுக்கு இணைப்புகள் வழங்கப்படாது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. பலரும் விண்ணப்பித்து வருவதால், இம்மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விண்ணப்பித்தவர் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திட்டம் துவங்கிய போது, 144 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். மக்களிடம் திட்டம் குறித்து தெரிய வந்தபிறகு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.

இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். 1,500க்கும் மேற்பட்டோருக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சரளா காவிரி திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது.

Advertisement