'மாநகராட்சி திட்டப்பணிகள் சுணக்கம், தாமதம் கூடாது'

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராகப் பொறுப்பேற்ற அமித் நேற்று முதன் முறையாக அலுவல் ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

துணை கமிஷனர்கள் மகேஸ்வரி, சுந்தரராஜன், தலைமை பொறியாளர் சபியுல்லா முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், கட்டுமானங்கள், சாலை பணிகள், பாலங்கள், வடிகால்கள் ஆகிய வற்றுக்கான நிதி ஆதாரங்கள், திட்டப்பணியின் தற்போதைய நிலவரம், முடிவுறும் காலம், தாமதமாகும் பணிகளில் அதற்கான காரணம், மேற்கொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வளர்ச்சித் திட்டப் பணிகளில் எந்த இடத்திலும் சுணக்கம், தாமதம் இன்றி பணிகள் செய்து விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நிதி ஆதாரங்கள், துறை ரீதியான அனுமதி போன்றவற்றில் தாமதம், தடைகள் இருந்தால் அது குறித்து தெரிவிக்க வேண்டும். அதற்கு உரிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

Advertisement