காலி இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க உத்தரவு

தாசரஹள்ளி; 'காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தாசரஹள்ளி மண்டலத்தில் உள்ள ஹெசரகட்டா பிரதான சாலை, சப்தகிரி மருத்துவ கல்லுாரி, சப்தகிரி பொறியியல் கல்லுாரி, கிர்லோஸ்கர் லே - அவுட், நேவி லே - அவுட் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

அங்கெல்லாம் காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுவது கண்டறியப்பட்டது. இந்த இடங்களில், குப்பை மேடு உருவாகும் அபாயம் உள்ளது.

எனவே, காலியாக உள்ள இடங்களில் குப்பை கொட்டப்படுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

சப்தகிரி பொறியியல் கல்லுாரிக்கு எதிரே உள்ள சாலையை விரிவுபடுத்த, அருகில் உள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்துவது; கிர்லோஸ்கர் சந்திப்பில் உள்ள தடைகளை அகற்றி, போக்குவரத்தை சரி செய்வது; கிர்லோஸ்கர் லே - அவுட்டில் உள்ள சாலைகளின் ஓரத்தில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றுவது.

கிருஷ்ணா பவன் ஹோட்டல் அருகே உள்ள நடைபாதையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது; நேவி லே - அவுட்டில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது; சாலைகளின் ஓரங்களில் நாற்காலி, சோபா, துணி, மெத்தை உள்ளிட்டவற்றை போடாமல், நேரடியாக கழிவு சேகரிக்கும் மையங்களுக்கு எடுத்து வருவது; வடிகால்களை துார்வாரும் பணிகளை மேற்கொள்வது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement