சுத்த விடுது சுந்தராபுரம்: போக்குவரத்து நடைமுறையில் வேண்டும் மாற்றம்

போத்தனூர், ஜூலை 2-

கோவை, சுந்தராபுரத்தில், 'யூ டர்ன்' நடைமுறையை மீண்டும் அமல்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுந்தராபுரத்தை கடந்து செல்கின்றன. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை, 8:00 முதல், 10:00 மற்றும் மாலை, 4:00 முதல் 7:00 மணி வரையிலும், அதிக நெரிசல் காணப்படுகிறது.

இதனை தவிர்க்க, கடந்த மாதம் 'யூ டர்ன்' நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, சிட்கோ நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், நான்கு சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி சங்கம் வீதி சாலையில் சென்று, சாரதா மில் சாலையை அடைய வேண்டும்.

அங்கிருந்து வலதுபுறம் திரும்பி, பொள்ளாச்சி சாலையை சென்றடைந்து, சிட்கோ நோக்கி செல்ல வேண்டும். இதற்காக, சங்கம் வீதி, சாரதா மில் சாலை ஒரு வழியாக மாற்றப்பட்டது.

இம்மாற்றத்தால் மதுக்கரை மார்க்கெட் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சி சாலையில் வலதுபுறமாக திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இச்சூழலில், பொள்ளாச்சி சாலையின் இடதுபுறத்திலுள்ள, சில கடைக்காரர்கள் புதிய நடைமுறையால் தங்களுக்கு வியாபாரம் பாதிப்பதாக, போலீஸ் உயரதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து, வாகனங்கள் வழக்கம்போல, நேர் வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டது. நான்கு சாலை சந்திப்பு, சாரதா மில் சாலை -- பொள்ளாச்சி சாலை சந்திப்பு பகுதிகளில், வாகனங்கள் திரும்ப அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் சங்கம் வீதியில் வசிப்போர் சுமார், 75 மீட்டர் தூரத்தில் சென்றடையும் பொள்ளாச்சி சாலைக்கு செல்ல சுமார், 400 மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல், மதுக்கரை மார்க்கெட் சாலையிலிருந்து போத்தனூர் நோக்கி செல்வோர், சுந்தராபுரம் பஸ் ஸ்டாப்பினை கடந்து, தனியார் மருத்துவமனை முன் சென்று திரும்ப வேண்டும்.

இந்த 'குண்டக்க மண்டக்க' மாற்றத்தால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்களின் அதிருப்தியை போக்க, மீண்டும் 'யூ டர்ன்' நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதுபோல் பொள்ளாச்சி, மதுக்கரை மார்க்கெட், சங்கம் வீதி மற்றும் சாரதா மில் சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் 'யூ டர்ன்' நடைமுறையில் வாகனங்கள் செல்வது எளிதாகும். மேலும் நான்கு சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியையும், உடனடியாக துவக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement