சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி தலைவியான தி.மு.க.,வை சேர்ந்த உமா மகேஸ்வரி மீது, அதே கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பதவியை பறித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., 8, அ.தி.மு.க., 12, ம.தி.மு.க., 2, காங்., 1, எஸ்.டி.பி.ஐ., 1, சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர்.

கடந்த முறை தி.மு.க., - அ.தி.மு.க., இரு வேட்பாளர்களும் தலா 15 ஓட்டுகள் பெற்றதால், உமா மகேஸ்வரி குலுக்கல் முறையில் நகராட்சி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் உமா மகேஸ்வரி, முறையாக கூட்டங்கள் நடத்தவில்லை; திட்டங்களை செயல்படுத்தவில்லை என, தி.மு.க., கவுன்சிலர்களே குறை கூறினர்.

ஏற்கனவே, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இரண்டாவது முறையாக கடந்த ஜூன் 2ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

நேற்று நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. இதில் உமா மகேஸ்வரி பங்கேற்கவில்லை. 29 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர்.

இதனால் அவரது பதவி பறி போனது. தி.மு.க., கவுன்சிலர் விஜயகுமார் மட்டும் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்தார்.

Advertisement