ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு

9

அவிநாசி: ''என் மகள் தற்கொலை வழக்கு விசாரணை மிக மெதுவாக நடைபெறுகிறது. சிறையில் இருக்கும் கவின்குமார், ஈஸ்வரமூர்த்திக்கு வெளியே இருந்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. என் மகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன்,'' என ரிதன்யாவின் தாய் ஆவேசத்துடன் கூறினார்.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி - கைகாட்டிப்புதுார் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, 53, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரின் மனைவி ஜெயசுதா, 42. தம்பதியின் மகள் ரிதன்யாவுக்கும், 27, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணனின் பேரனான ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார், 28, என்பவருக்கும், ஏப்., 11ல் திருமணம் நடைபெற்றது.


கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ரிதன்யாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த நிலையில், கடந்த, 28ம் தேதி சேவூர் அருகே காரில் சென்ற ரிதன்யா, தன் தந்தை அண்ணாதுரைக்கு, எட்டு ஆடியோ தகவலை, 'வாட்ஸாப்'பில் அனுப்பி விட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



இது தொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


இவர்களில், சித்ராதேவியை தவிர, மற்ற இருவரை கைது செய்து, திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சித்ராதேவி தனது உடல்நிலையை காரணம் காட்டி, 'பைண்டிங் ஆப்' என்ற முறையில், பல நிபந்தனை விதித்து, போலீசார் கைது செய்யாமல் அவரை விடுவித்தனர்.


இதற்கிடையே, ரிதன்யா வழக்கில், திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., தலைவராக உள்ள கவின்குமாரின் தாத்தா கிருஷ்ணன் உள்ளதால், ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்து, வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக கூறி, நேற்று முன்தினம் சேலத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை சந்தித்து, சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு அளித்தனர்.

பின், அவர் அளித்த பேட்டி:



ரிதன்யா ஒரே பெண் என்று செல்லமாக வளர்த்தோம். அதனால், கவின்குமார் குடும்பத்தை நல்ல பாரம்பரியமான குடும்பம் என நம்பி, கோடி கணக்கில் நகை, கார் என பணம் செலவழித்து திருமணம் செய்து வைத்தோம். ஆனால், சைக்கோ போல கவின்குமார் ரிதன்யாவை துன்புறுத்தியுள்ளார்.


அவருக்கு வாடகை பணம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்து வந்துள்ளார். இதன் காரணமாகவே, என் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக 'டார்ச்சர்' செய்துள்ளார்.



அதனால் ஏற்பட்ட காயங்களை மாமியார் சித்ராதேவியிடம், எனது மகள் காட்டிய போது, தன் மகனை கண்டிக்காமல், 'என் மகன் அப்படித்தான்... அனுசரித்துப் போ' என கூறியுள்ளார்.


திருமணம் முடிந்து இரண்டு வாரங்களிலேயே தொழில் துவங்க எங்களிடம் பணம் கேட்டனர். ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தோம். இதனால் ரிதன்யாவை திருப்பி எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம். அதற்குள் தற்கொலை செய்து கொண்டாள்.


என் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் மகள் தற்கொலை வழக்கு மிக மெதுவாக நடைபெறுகிறது. தற்போது வரை சிறையில் இருக்கும் கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்திக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது. என் மகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரிதன்யாவின் தாய் ஜெயசுதா கூறிய குற்றச்சாட்டு குறித்து, கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, ''சிறையில் உள்ளவர்களுக்கு வெளியில் இருந்து சாப்பாடு வந்திருக்க வாய்ப்பில்லை. இது தவறான தகவல்,'' என்றார்.

Advertisement