ரூ.5 கோடி ஊழலில் அலட்சியம்: பழங்குடியினர் நலத்துறை மீது புகார்

2

சென்னை: பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த மோசடி தொடர்பாக, ஒருவர் மட்டுமே பணியிட மாறுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பழங்குடியினர் நலத் துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு, பழங்குடியினர் வாழ்விட மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுதுமாக பயன்படுத்தப்படாமல், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில், சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலக இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் என்பவர் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக, பொது மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கடலுாரை சேர்ந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:

கடந்த, 2023ம் ஆண்டு கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், 53 இடங்களில் சாலை மேம்பாடு மற்றும் ஆறு இடங்களில் குடிநீர் வசதிகள் செய்யவும், 5.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை முறையாக செலவிடாமல், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்தனர்.

இது குறித்து, கடந்தாண்டு டிச., மாதம் ஆதி திராவிடர் நலத் துறை செயலரிடம் புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது.

கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் முன்பு இளநிலை பொறியாளராக பணியாற்றி, தற்போது சேலம் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றி வரும் விஸ்வநாதன் மட்டும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒப்பந்ததாரர்கள் சிலர் ஆளும் கட்சி தொடர்புடையவர்கள் என்பதால், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் கண்டுகொள்ளாமல் காலம் கடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement