4.54 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த... இலக்கு; 97 குழுக்கள் மூலம் சிறப்பு முகாம் துவக்கம்

விழுப்புரம்: மாவட்டத்தில், 4.54 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதில், 97 குழுக்கள் மூலம் 22ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.



கால்நடைகளை தாக்கும் 'கோமாரி நோய்” என்பது, ஆடு, மாடுகளை தீவிரமாக தாக்க கூடிய ஓர் வைரஸ் நச்சுயிரி.
இந்த நோய் மாடு, ஆடு, பன்றி, மான், யானை போன்ற விலங்குகளைப் பாதிக்கும். 104 டிகிரி அளவில் கடுமையான காய்ச்சலை உண்டாக்கும்.

மிக எளிதில் தொற்றக்கூடிய நோய். பாதிப்புக்கு உள்ளான கால்நடையின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் ஒழுகும். அசை போடும்போது 'சப்பு கொட்டுவது' போல் சத்தம் உண்டாகும். வாயின் உட்பகுதி நாக்கு உள்ளிட்டவைகளில், கொப்புளங்கள் தோன்றி உடைந்து புண்ணாகும்.

கடும் பாதிப்பு



இதனால் கால்நடைகள் சரியாக தீவனம் உட்கொள்ளாது. சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும். பசுவிடம் பாலை அருந்துவதால் கன்றுகளுக்கும் கண்டிப்பாக நோய் தாக்கி இறக்க நேரிடும்.

இந்த வகை வைரஸ் அல்லது நச்சுயிரிகள் மூளையை பாதிப்பதால், உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க கூடிய ஓர் பகுதி தாக்கப்பட்டு, குறிப்பாக பசு மற்றும் எருமை இனங்களில் உடலின் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.

இத்தகைய பாதிப்பினால் பசுக்கள், எருமைகள் எப்பொழுதும் அதிகமாக மூச்சு இரைத்தலுடன் இருக்கும்.

பாதிப்புக்கு உள்ளான கால்நடைகள், சினை பிடிக்காமல் பல மாதங்கள் வரை பிரச்னைகளை ஏற்படுத்தும். சரிவர உணவு உட்கொள்ளாது.

இந்த வைரஸ் 300 கி.மீ., வேகத்தில் காற்றில் பரவி இதர கால்நடைகளை தாக்கும். பனிக்காலங்களில் கால்நடைகளில் அதிக பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நோய் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுப்பு பணிகள் தீவிரம்



இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது. விழுப்புரம் கோட்டத்தில் 2 லட்சத்து 11 ஆயிரம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2 லட்சத்து43 ஆயிரத்து 500 கால்நடைகள் என மொத்தம் 4.54 லட்சம் கால்நடைகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இந்த முகாம் வரும், 22ம் தேதி வரை, 21 நாட்களுக்கு நடக்கும். மொத்தம், 97 தடுப்பூசி போடும் குழுக்களின் மூலம், தேசிய விலங்கின நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் இத்தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.

இதன்படி, விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் முகாமை துவக்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் பத்மஜா, கால்நடைத்துறை இணை இயக்குநர் பிரசன்னா, துணை இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement