முதுநிலை பல் மருத்துவ கலந்தாய்வு தாமதமின்றி நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை தாமதமின்றி நடத்திட வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நலச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன், கவர்னர், முதல்வர், கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு, அனுப்பி உள்ள மனு;

புதுச்சேரியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லுாரி, மாகி பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை, சென்டாக் மூலம் 1.07.2025 முதல் 10.07.2025க்குள் விண்ணப்பங்களை பெற்று கலந்தாய்வின், முடிவுகளை வரும் 14ம் தேதிக்குள் முடிக்குமாறு பல் மருத்துவ கவுன்சில் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

ஆனால், 1ம் தேதி சென்டாக் மூலம், முதுநிலை பல் மருத்துவத்திற்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்கவில்லை. இது சம்மந்தமான கோப்புகள், கவர்னர் மற்றும் முதல்வருக்கு கால தாமதமாக வைக்கப்பட்டுள்ளது.

வரும் 14ம் தேதிக்குள் முதுநிலை பல் மருத்துவத்திற்கான இணையதள கலந்தாய்வை நடத்தி சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கைக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முடிக்க வேண்டும்.

எனவே, சுகாதாரத்துறை. இயக்குனரகம், சென்டாக் நிர்வாகம், இணைந்து கால தாமதமின்றி முதுநிலை பல் மருத்துவ கலந்தாய்வை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement