அதிருப்தி:கூட்டணி மீது ஆதிதிராவிடர்கள், மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்

புதுச்சேரி: அமைச்சர் பதவி பறிப்பு, புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி
பா.ஜ., மேலிட உத்தரவின்படி என்.ஆர்.காங்., கூட்டணி அரசில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பதவி பறிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பூசலை சமாளிக்க பா.ஜ., எடுத்துள்ள இந்த முடிவு ஆதிதிராவிடர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சி 2021ம் ஆண்டு பொறுப்பேற்றதும் என்.ஆர்.காங்., ஆதிதிராவிடர் துறையை கையில் எடுத்துக் கொண்டது. அக்கட்சியின் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ.,வான ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த சந்திர பிரியங்காவிற்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. இரண்டாண்டு கழித்து, காரணம் ஏதும் கூறாமல், அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்வர் ரங்கசாமி, ஆதிதிராவிடர் நலத்துறையை, பா.ஜ.,வை சேர்ந்த சாய்சரவணன்குமாருக்கு வழங்கினார். இதனால், ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்காவை நீக்கினாலும், அப்பொறுப்பினை அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கியதால், சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், சாய்சரவணன்குமாரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அமைச்சரவையில் இருந்த ஆதிதிராவிடர் பிரதிநிதித்துவம் பூஜ்யமாகிவிட்டது.
கடந்த காலங்களில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்பு கூறு நிதி முழுமையாக செலவிடப்படாமல், மடைமாற்றம் செய்யப்பட்டு வந்தது. ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவரையே அத்துறைக்கு அமைச்சராக நியமித்ததால், இந்த சிக்கல் தீர்ந்து, சுமூகமாக சென்ற நிலையில், சாய்சரவணன் குமாரை அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கியது ஆதிதிராவிடர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் பா.ஜ., மீனவர் சமுதாயத்தினரிடம் கடும் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளது. புதுச்சேரியில் மூன்றாவது பெரிய சமூகமாக மீனவர்கள் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது மீனவர் ஓட்டுகளை குறி வைத்து மத்திய அமைச்சர்களை கடலோர கிராமங்களில் பா.ஜ., களம் இறக்கி வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதற்கு பலனும் கிடைத்து ஆட்சியிலும் அமர்ந்தது. மீனவர் கிராமங்களில் நுழைந்து மக்களிடம் நம்பிக்கை பெற்றது.
இதனால் மற்ற கட்சிகள் போன்று பா.ஜ., இல்லை. மீனவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை தரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அப்போது நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமனத்தில் மீனவ சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிந்துரை செய்துள்ள பட்டியலிலும் மீனவ சமுதாயத்தினர் ஒருவரும் இடம் பெறவில்லை. இதனால், ஓட்டுகளுக்கு மட்டும் நாங்கள் தேவை; அதிகாரத்தில் நாங்கள் அமரக்கூடாதா என மீனவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனால், மீனவர் மற்றும் ஆதிதிராவிடர் அமைப்புகள், வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணியை புறக்கணிக்க ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் எதிர்கட்சிகள், என்.ஆர்.காங்., பா.ஜ., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆதிதிராவிடர்கள், மீனவர்களுக்கு எதிரானவைதான். இது தான் என்.ஆர்.காங்., -பா.ஜ.,வின் உண்மை முகம் என்று ஆதிதிராவிடர், மீனவர்கள் புறக்கணிப்பு விவகாரத்தை அரசியலாக்கி சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே கடும் நெருக்கடியை கொடுக்க துவங்கியுள்ளன.
ரேஷன் கடை திறப்பு, இலவச அரிசி விவகாரத்தில் மக்களிடம் ஏற்பட்ட கடும் அதிருப்தியால் தான் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வியை தழுவியது. ஏற்கனவே சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பா.ஜ.,வை எதிர்கட்சிகள் சித்தரித்து நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் சிறுபான்மை ஓட்டுகள் பா.ஜ.,விற்கு கிடைப்பதில்லை. இது என்.ஆர்.காங்., கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இப்போது பா.ஜ., தலைமை எடுத்த முடிவு ஆதிதிராவிடர்கள், மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணிக்கு கடும் சிக்கலும், சவாலும் ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் மீனவர்கள் என மும்முனை எதிர்ப்பினை முதல்வர் ரங்கசாமி எப்படி காய் நகர்த்தி சமாளிக்க போகிறார் என்பதை பொருத்தே சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணியின் வெற்றி அமையும்.
மேலும்
-
நகை திருட்டு புகார் கூறிய நிகிதா மீது துறை நடவடிக்கை: கல்லூரி கல்வி அதிகாரிகள் திட்டம்
-
செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!
-
ஜூலை 15ல் இந்தியா வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்: அமெரிக்கா உறுதி
-
வெப்ப அலை ஐரோப்பிய மக்கள் தவிப்பு
-
நடிகர் - நடிகையருக்கு 'கோகைன்' விற்றோம்: கடத்தல் புள்ளி கெவின் வாக்குமூலத்தால் சிக்கப்போவது யார்?
-
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு; கர்நாடக சங்கமும் கவுரவிப்பு