குறுகலான சாலையில் கவிழும் வாகனங்கள் ஒரு மாதத்தில் ஐந்து விபத்து; 9 பேர் காயம்

திருவாலங்காடு:அரும்பாக்கத்தில் சாலை குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஒரு மாதத்தில் ஐந்து விபத்துகளில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் ----என்.என்.கண்டிகை மாநில நெடுஞ்சாலை 14 கி.மீ., துாரம் கொண்டது. 3 மீட்டர் அகலம் கொண்ட இச்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது. சாலை குறுகி காணப்படுவதால் அப்பகுதியில் எதிரெதிர் வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் கிராமத்தில் இருந்து ஆற்காடுகுப்பம் நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று சென்றது.

எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக சரக்கு ஆட்டோ ஒதுங்கிய போது, விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது.

இதில் ஆட்டோவில் பயணித்த கூலி தொழிலாளிகள் உள்பட ஆறு பேர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த மாதம் முதல் ஐந்து விபத்துக்கள் நடந்துள்ளன இதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

சாலை ஆக்கிரமித்து குறுகியுள்ளதே விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆற்காடுகுப்பம் - அரும்பாக்கம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement