கூட்டுறவு வங்கிகளில் நிதி நெருக்கடி நகை கடன் வழங்காமல் கைவிரிப்பு

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த மூன்று மாதங்களாக கடும் நிதி நெருக்கடியால் நகை கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள், தங்களது அவசரதேவைக்கு தனியார் வங்கிகளில் அதிக வட்டிக்கு நகை அடகு வைத்து பணம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, 10 தொடக்க ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள், சங்க உறுப்பினர்கள், தொழில் கடன், நகைக்கடன், திருமண கடன், பயிர்கடன் போன்றவை குறைந்த வட்டியில் பெற்று வருகின்றனர். பொதுமக்களும், கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி பணம் செலுத்தி வருகின்றனர்.

இந்த தொகையில் இருந்து விவசாயிகள் மற்றும் வங்கியில் கணக்கு உள்ளவர்களுக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு பயிர்கடன் தனியாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதியதாக நகைகடன் பெற வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு, நகைகடன் வழங்க முடியாத நிதி நெருக்கடியால் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறியதாவது:

எங்களது வங்கிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. எங்களிடம் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பணத்தை திருப்பி செலுத்தினால் அந்த பணத்தில் இருந்து நகைக்கடன் வழங்கி வருகிறோம்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து, தள்ளுபடி செய்ததால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தற்போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் கடுமையான நிதி நெருக்கடி தள்ளப்பட்டுள்ளதால் புதியதாக நகைகடன் வழங்க முடிவதில்லை.

அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் தான் மட்டுமே புதியவர்களுக்கு நகைகடன் வழங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement