இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்க உள்ளதா அமெரிக்கா? : ஜெய்சங்கர் பதில்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 'இதையும் கையாள்வோம்' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியரசு கட்சியின் செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரஹாம் சட்ட மசோதா ஒன்றை சமீபத்தில் செனட்டில் தாக்கல் செய்தார். அதில், 'ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு, 500 சதவீத வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயில், 70 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றன' என கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமானால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில், 26 சதவீத பரஸ்பர வரி விதிக்க உள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருட்களின் வரிகளை கணிசமாக குறைப்பதே பரஸ்பர வரியின் நோக்கம்.

இந்த நிலையில் தான், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால், 500 சதவீத வரி என்ற மசோதாவை அமெரிக்க செனட்டர் கொண்டு வந்துள்ளனர். நம் நாட்டின், 45 சதவீத எரிபொருள் தேவையை ரஷ்ய இறக்குமதி கச்சா எண்ணெய்களே பூர்த்தி செய்கின்றன.

இந்த மாற்றம் கடந்த, 2022க்குப் பின் ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு மே மாதம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு, 19.6 லட்சம் பேரல்களாக உயர்ந்தது.

இந்நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமின் மசோதா எங்கள் நலன்களை பாதிக்கக்கூடும் என்பதால் நாங்கள் அவருடன் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் லிண்ட்சே அவரை தொடர்பு கொண்டார்.

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எங்கள் நலன்கள் குறித்த கவலைகளை அவருக்கு தெரிவித்துவிட்டோம். அந்த பாலத்தை நாம் கடக்க வேண்டிய நிலை வரும்போது, அதை அப்போது கையாளுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement