எம்.எல்.ஏ., அருளை நீக்க அதிகாரம் இல்லை: அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபம்

5

சென்னை: ''பா.ம.க., -- எம்.எல்.ஏ., அருள், கட்சியில் நீடிக்கிறார்; இணைப் பொதுச்செயலராக தொடர்வார்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார். இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:

பா.ம.க.,வில் இருந்து, எம்.எல்.ஏ., அருளை பொறுப்பில் இருந்து நீக்க, அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.

பா.ம.க., நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள், பா.ம.க.,வின் எம்.எல்.ஏ., மட்டுமல்ல, கட்சியின் கொறடா. கட்சியின் சட்டசபை குழு தலைவராக, ஜி.கே.மணி இருக்கிறார்.

ஜி.கே.மணி வாயிலாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துதான், அருளை நீக்க முடியும். அதற்கு கட்சி நிறுவனரான நான் அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. பா.ம.க., இணைப் பொதுச்செயலர், நிர்வாகக் குழு உறுப்பினர், எம்.எல்.ஏ., என மூன்று பொறுப்புகளில் உள்ளார். அதே நிலையில் அருள் தொடருவார்.

என் மனம் வேதனைப்படும் அளவுக்கு, கட்சியில் பலர் செயல்படுகின்றனர். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பா.ம.க.,வை நடத்துகிறேன்.

தொடந்து நானே வழிநடத்துவேன். தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி.

கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூடித்தான், கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டும்.

வரும் ஆக., 10ல், நடைபெறும், பா.ம.க., மகளிர் மாநாடு ஏற்பாடுகளை கவனிக்க, பூம்புகார் செல்கிறேன். அதன் பின், பொதுக்குழு, செயற்குழு கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, அன்புமணி தொடர்பான கேள்விகளையே நிருபர்கள் தொடர்ந்து கேட்க, அதை ராமதாஸ் தவிர்த்தார்.

Advertisement