'செபக் டக்ரா' விளையாட்டில் கல்லுாரி மாணவர் சாதனை

தார்வாட் மாவட்டம் உட்பட கர்நாடகாவின் வட மாவட்டங்களில், 'செபக் டக்ரா' என்ற விளையாட்டு பிரபலம் அடைந்துள்ளது. இதில் கல்லுாரி மாணவர் விகாஸ் வாலிகார் சாதனை படைத்து வருகிறார்.

வாலிபால் விளையாட்டில் பந்தை கையால் அடித்து கோல் போடுவர். செபக் டக்ரா விளையாட்டில் பந்தை காலில் உதைத்து விளையாடுவர். இந்த விளையாட்டு கர்நாடகாவின், வட மாவட்டங்களில் பிரபலம் அடைந்து வருகிறது; சாதனையாளர்களும் உருவாகின்றனர். இவர்களில் விகாஸ் வாலிகாரும் ஒருவராவார்.

விஜயபுரா மாவட்டம், அலமேலாவை சேர்ந்தவர் விகாஸ் வாலிகார், 20. இவர் தற்போது தார்வாடின் கிளாசிக் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர் செபக் டெக்ரா விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்.

2022 தாவணகெரேவில் நடந்த மாநில அளவிலான செபக் டக்ரா சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, இரண்டாம் இடத்தை பெற்றார். அதே ஆண்டு பீஹாரின் பாட்னாவில் நடந்த போட்டியில் பங்கேற்றார்.

கடந்த 2023ல் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடந்த 33வது சீனியர் செபக் டக்ரா சாம்பியன்ஷிப்பில், விகாஸ் பங்கேற்றார். சமீபத்தில் நடந்த, 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.

அதே அண்டு தாவணகெரேவில் நடந்த, 11வது செபக் டக்ரா மாநில சாம்பியன் ஷிப்பில், விகாஸ் முதல் இடத்தை பிடித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

எனக்கு சிறிய வயதிலேயே, செபக் டக்ரா விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பெலகாவி மாவட்டத்தின் சந்தகிரியில் உள்ள விளையாட்டு பள்ளியில் சேர்ந்தேன். எனக்கு லட்சுமண் லமானி பயிற்சி அளித்தார்.

வரும் அக்டோபரில், தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க தயாராகி வருகிறேன். படிப்புடன், தினமும் நான்கு மணி நேரம் விளையாட்டு பயிற்சி செய்கிறேன். இந்த விளையாட்டில் சாதனைகள் செய்ய வேண்டும் என்பது, என் விருப்பமாகும். அந்த இலக்கை நோக்கி ஓடுகிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

Advertisement