பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்


புதுடில்லி: நாடு முழுவதும் விமான பயணிகளின் சேவையில் சிறந்து விளங்கும் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய பிரதேசத்தில் உள்ள இரு விமான நிலையங்கள் உள்பட 3 விமான நிலையங்கள் முதலிடத்தில் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பயணிகளின் சேவையில் சிறந்து விளங்கிய விமான நிலையங்கள் குறித்து ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள 62 விமான நிலையங்களில் 60ல் சர்வே நடத்தப்பட்டது.

அதில், மத்திய பிரதேசத்தில் உள்ள இரு விமான நிலையங்கள் உள்பட 3 விமான நிலையங்கள் 5க்கு 5 மதிப்பெண்கள் எடுத்துள்ளன. ம.பி.,யில் உள்ள போபால், கஜுராஹோ மற்றும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் விமான நிலையங்கள் முதலிடத்தில் உள்ளன.

ம.பி.,யின் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராஹோ விமான நிலையம், உலகப் பாரம்பரிய சுற்றுலா தலமான கஜுராஹோ கோவில் கோபுரங்களை பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய வாயிலாக உள்ளது. இந்தியாவின் சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் சேவைத் தரத்தில் முன்னேறி வருவதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 6 மாதங்கள் விமானப் பயணிகளிடம் நேரடியாக கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது," என்றார்.

பயணிகள் சேவையில் மிகவும் மோசமான இடத்தை அஸ்ஸாமின் ரூப்சி விமான நிலையம் பிடித்துள்ளது. 5 மதிப்பெண்களுக்கு 2.5 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Advertisement