மலேஷியா டேக்வாண்டோ போட்டி இந்திய அணியில் பெலகாவி மாணவி

கை, கால்களால் எதிரியை தாக்கி, அவரை செயலிழக்க செய்யும் கலை, 'டேக்வாண்டோ' என்று அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு விதமான கராத்தே தான். வரும் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை மலேசியாவில் 10வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்க உள்ளன.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், கர்நாடகாவில் இருந்து பெலகாவி மாவட்டத்தின் முதலகியை சேர்ந்த லட்சுமி எம்.ராதாரட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.


முதலகியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் லட்சுமி எம்.ராதாரட்டி, மாநில அளவிலான டேக்வாண்டோ வீராங்கனை ஆவார். இதற்கு முன்பு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு முறை தங்கம், தேசிய அளவில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். வியட்நாம், லெபனான் நாடுகளில் நடந்த சர்வதேச ஓபன் டேக்வாண்டோ போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement