கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகா அருகே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மைசூர் - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மைசூர் - உதய்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று பெங்களூரூ வழியாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ரயில் இன்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


இதனை அறிந்த ரயில் பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்து அவர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


இதையடுத்து, மாற்று இன்ஜின் மூலம் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. மேலும், ரயில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிபத்து குறித்து விசாரித்தனர். தொழிலநுட்பக் கோளாறே தீவிபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.


இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், "மைசூர் - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்ட நிலையில், மாற்று இன்ஜின் மூலம் மீண்டும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்து எந்த புகாரும் வரவில்லை. தொழில்நுட்ப கோளாறாக இருந்திருக்கலாம்," என்றார். லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Advertisement