பைக் ரேசில் பறக்கும் நித்தில்லா தாஸ்

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நிகல் தாஸ். இவர், 2005ல் வேலை விஷயமாக பெங்களூருக்கு குடி பெயர்ந்தார். இவர் ஒரு சைக்கிள் ரேசரும் கூட. இவரது மகள் நித்தில்லா தாஸ், 14.

பெண் பிள்ளைகளுக்கு தங்கள் தந்தை போல ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே. இதில், நித்தில்லாவும் விதிவிலக்கு அல்ல. நித்தில்லாவுக்கு தன் தந்தை போல சைக்கிள் ரேசர் ஆக வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலே இருந்து உள்ளது. இதனால், 6 வயது இருக்கும் போதே, சைக்கிள் ரேஸ் உலகத்திற்குள் நுழைந்தார்.

பைக் ரேஸ்



அப்போதே, பல போட்டிகளில் கலந்து கொண்டார். சில போட்டிகளில் வெற்றி பெற்றார். இவை, அவரை பெரிதும் உற்சாகப்படுத்தின. தன் 10 வயதில் மோட்டார் பைக் ரேஸ் மீது ஈர்ப்பு வந்துள்ளது.

அதிலும், ஒரு கை பார்க்க சென்றார். இதற்கும் அவரது தந்தை உறுதுணையாக இருந்தார். மகளின் ஆசைகளை நிறைவேற்றுவதையே தன் விருப்பமாக நிகில் கொண்டிருந்தார். நித்தில்லா 7ம் வகுப்பு படிக்கும் போது, சைக்கிள் ரேசில் ஆடவர்களுடன் போட்டியிட்டார். அதிலும் வெற்றி பெற்று அசத்தினார். போட்டியென வந்துவிட்டால் ஆண், பெண் பேதம் பார்க்காமல் தீயாய் செயல்படுவார்.

இளம் வீராங்கனை



ஒரே சமயத்தில் சைக்கிள் ரேஸ், பைக் ரேஸ் என இரண்டிலும் ஜொலித்தார். 2018ல் எம்.டி.பி., எனும் மலை மீது நடக்கும் சைக்கிள் ரேசிங் போட்டிகளில் பங்கேற்றார். இதில், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்று அசத்தினார். கர்நாடகாவில் எம்.டி.பி., ரேசில் வேகமான இளம் வீராங்கனை எனும் பட்டத்தை பெற்றார்.

அதேபோல, 2022 ல் டி.வி.எஸ்., நடத்திய பைக் ரேசிங்கில் தென் மாநில அளவில் வெற்றி பெற்றார். 2022ல் உலக அளவில் நடந்த எப்.ஐ.எம்., மோடோ ஜி.பி., ரேசில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்றார். இதில், மகளிர் பரிவில் டாப் 10க்குள் வந்தார்.

பயம் இல்லை



நித்தில்லா தாஸ் கூறியதாவது:

ஆண்கள் பைக் ரேசில் பங்கேற்று வெற்றி பெற்று உள்ளேன். ஒரு முறை ரேசில் என்னை சக வீரர் கீழே தள்ளி விட்டார். அதை என்னால் இதுவரை மறக்க முடியவில்லை. ரேசில் பங்கேற்றால் வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருக்கும். மனதில் பயம் இருக்காது.

சைக்கிள், பைக் ரேசிங் போன்றவை ஆடம்பரமான விளையாட்டுகள். இதில் பயிற்சி பெறுவதற்கு லட்சக்கணக்கில் செலவாகும். எனவே, ஸ்பான்சர்கள் இருப்பது பயிற்சி பெற முக்கியம். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வாங்குவதே எனது லட்சியம். என் தம்பியும் பைக் ரேசிங்கில் ஈடுபட்டு வருகிறான். என் தந்தையே எனது ரோல் மாடல்.


இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement