காட்சிப்பொருளாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி; பள்ளி மேலாண்மைக்குழுவினர் அதிருப்தி

உடுமலை; அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்கும் வகையில், தரப்பட்ட சுத்திகரிப்பு கருவிகள் காட்சிப்பொருளாக இருப்பதால், மேலாண்மை குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றை சுத்திகரித்து வழங்க கருவிகளும் உள்ளன. ஆனால், பெரும்பான்மையான அரசுப்பள்ளிகளில் இந்த கருவிகள் பயன்பாட்டில் இருப்பதில்லை.

குடிநீர் பிடித்து வைப்பதும், மாணவர்களை வீடுகளிலிருந்து கொண்டுவரவும் கூறுகின்றனர். பள்ளிகளில், இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன.

தற்போது மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் அருந்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப 'வாட்டர் பெல்' திட்டத்தையும் அறிவித்துள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறுகையில், 'மாணவர்கள் பள்ளிகளில் குடிநீர் அருந்தினால் சளி பிடிக்கிறது. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்குதான், அரசு கருவி வழங்கியுள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் அவற்றை முழுமையாக பயன்படுத்துவதில்லை. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கல்வித்துறை, இதுகுறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement