ஊட்டியில் சிறுத்தையை கண்காணிக்க நான்கு தானியங்கி கேமராக்கள்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க, 4 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள, பழைய பூங்கா சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே சில நாட்களாக சிறுத்தை நடமாடுவதை சிலர் பார்த்துள்ளனர். மீண்டும் அப்பகுதியில் உள்ள புதரில் சிறுத்தை ஓய்வெடுத்ததை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனத்துறையினர் தாவரவியல் பூங்கா பகுதியிலிருந்து, பழைய பூங்கா குடியிருப்பு பகுதி வரை, 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை நேற்று பொருத்தினர்.

வனத்துறையினர் கூறுகையில்,' தாவரவியல் பூங்கா அருகே, குடியிருப்பு பகுதிகளில் நான்கு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாடுவதை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement