விதை உற்பத்திக்கு தேசிய அளவில் தனி இணைய தளம்; வினியோகம் வரை ஒரே தளத்தில் தகவல்

உடுமலை; தேசிய அளவில், விதைப்பண்ணை அமைத்தல், கள ஆய்வு, விதை பதப்படுத்துதல் என விதை உற்பத்தி பதிவுக்கான தனி இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில், அனைத்து மாநிலங்களிலும், உணவு பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தரமான நெல், மக்காச்சோளம், தானியங்கள், காய்கறி என அனைத்து விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், தரமான விதை வினியோகத்தை உறுதிப்படுத்தவும், விதைப்பண்ணை அமைத்தல், கள ஆய்வு, விதை பதப்படுத்துதல் என அனைத்து பணிகளும் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யம் வகையில், தனி இணையதளம் 'சதி' ( SATHI--- - seed traceability, authentication and holistic inventory) விதை தரமறிதல் அங்கீகாரம் மற்றும் முழுமையாக விதை இருப்பு கண்காணிப்பு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்று உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, மேம்பட்ட பயிர் விளைச்சல், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட ஆதாரமாக விதைகள் உள்ளன.

விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற, அதிக முளைப்புத்திறன், மகசூல் மற்றும் பூச்சி உள்ளிட்ட நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகள் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் விதைச்சான்றளிப்புத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

இத்துறையில், அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை உள்ளடக்கிய, 'சதி' என்ற இணைய வழி பதிவு தளம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதில், விதைப்பு அறிக்கை பதிவு, வயலாய்வு, முத்திரையிடுதல், சுத்திப்பணி, மாதிரி எடுத்து பகுப்பாய்வு, அறிக்கை பெறுதல், சான்றட்டை பொருத்தி தரமான விதைகளாக வினியோகம் செய்வது வரை அனைத்து விதைச்சான்று நடைமுறைகளும் எளிதாக கண்காணிக்க முடியும்.

இதில், மாநிலம் வாரியாக, மாவட்டம், தாலுகா வாரியாக, உற்பத்தி செய்யப்படும் தரமான அனைத்து விதைகள் குறித்தும், தேசம் முழுவதும் உள்ள விவசாயிகள், விதை ரகங்கள் பருவம் வாரியாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த புதிய இணைய தளம் குறித்த பயிற்சி முகாம், தாராபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதை சான்றழிப்பு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இணைய தள பதிவு மற்றும் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement