கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:



தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி தேவாலா, கூடலுாரில் தலா 8 செ.மீ.,; சென்னை காசிமேடு பகுதியில் 7; நீலகிரி மாவட்டம் நடுவட்டம், சென்னை பெரம்பூரில் தலா 6 ; சென்னை கொளத்துார், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கோவை சின்னக்கல்லார், சென்னை பிராட்வே, தண்டையார்பேட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இது தவிர, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்தது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும், சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்யும். ஓரிரு இடங்களில், பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement