தண்டவாளத்தில் மண் சரிவு; ரயில்கள் தாமதமாக இயக்கம்

அரியலுார்; அரியலுார் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

அரியலுார் அடுத்த வெள்ளூர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணியளவில், சுரங்கப்பாதைக்காக வெட்டி எடுக்கப்பட்ட மண், மீண்டும் அதே பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள், அந்த நேரத்தில் வந்த விழுப்புரம் - திருச்சி பயணியர் ரயிலை, வெள்ளூர் ரயில் நிலையத்திலும், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை செந்துறை ரயில் நிலையத்திலும் நிறுத்தி, பொக்லைன் இயந்திரம் கொண்டு, சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.

மண் சரிந்து விழுந்த இடத்திலுள்ள தண்டவாளம் சேதமடைந்துள்ளதா என ஆய்வு செய்த பின், ஒரு மணி நேரம் தாமதமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு ரயில்களும் புறப்பட்டு சென்றன. இதனால், பயணியர் அவதியடைந்தனர்.

Advertisement