தி.மு.க.,வினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை

திருப்பூர்; 'தொழில் விவகாரத்தில் தி.மு.க.,வினர் தலையிட்டு என்னை மிரட்டி அசிங்கப்படுத்தினர்; என் சாவுக்கு தி.மு.க.,வினர் தான் காரணம்' என ஆடியோ வெளியிட்டு, அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வானந்தம், 37; குண்டடம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர்.

இவர், மக்காச்சோளம் வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துப்பிரியா, 27, நவநாரி ஊராட்சி முன்னாள் தலைவர். தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் காலை, 11:15 மணிக்கு, சங்கிலிபாளையம் பிரிவிலுள்ள ஒரு தோட்டம் அருகில், செல்வானந்தம் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விஷம் குடித்திருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன் செல்வானந்தம், தன் மொபைல் போனில் அவர் பதிவு செய்திருந்த ஆடியோவில் பேசியிருந்ததாவது:

திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளம் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தேன்.

எனக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் இருந்தது.

அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக பணத்தை கேட்டு தி.மு.க.,வில் மதுரை மண்டல பொறுப்பாளராக இருக்கும் மணிமாறன், அவருடன் சேர்ந்த மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முத்துகுமார் ஆகிய இருவரும் இரண்டு மாதங்களாக என்னை 'டார்ச்சர்' செய்கின்றனர்.

தாராபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலர் செந்தில்குமாரிடம் என்னை அழைத்துச் சென்று மிரட்டி, எழுதி வாங்கினர். அதற்காக வட்டிக்கு, 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன்.

தற்போதும், 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதற்கு பிறகும் அவர்கள் என்னை விடவில்லை. என்னை டார்ச்சர் செய்து அசிங்கப்படுத்துகின்றனர்.

பழநி தாளையூத்தை சேர்ந்த வெங்கடேஷ், அவரது பங்குதாரர்கள், அனுப்பாத மக்காசோளத்திற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

அத்துடன், ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன், தனக்கு அனுப்பாத சோள வண்டிக்கு எல்லாம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, 85 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்கிறார்.

கடந்த வாரம் குண்டடம் அருகே காரில் அமர்ந்து கொண்டு மிரட்டி, 40 லட்சம், 45 லட்சம் ரூபாய்க்கு, இரண்டு காசோலைகளை வாங்கிக் கொண்டார். 'உன் மனைவி மீது 420 வழக்கு போடுவோம்' என, மிரட்டினர். காசோலையை எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதனால் மன உளைச்சலில் என் உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன்.

இவ்வாறு, அழுதபடியே பேசியிருந்தார்.

தொடர்ந்து, அவரது மனைவி புகாரில், குண்டடம் போலீசார் ஆடியோவை கைப்பற்றி, மதுரையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர்கள் மணிமாறன், முத்துக்குமார், தாளையூத்து வெங்கடேஷ், ராஜபாளையம் சீனிவாசன் என, நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்வானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர், இறப்புக்கு காரணமான தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தி, 'சீனிவாசனை கைது செய்துள்ளோம். மற்ற மூவரை தேடி வருகிறோம். அவர்களையும் கைது செய்வோம்' என, உறுதியளித்தனர். இயைதடுத்து, உடலை பெற்றுக்கொண்டனர்.

Advertisement