ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவரை போலீசார் தாக்கிய சம்பவம்; தேவதானப்பட்டியில் ஏ.டி.எஸ்.பி., விசாரணை

தேவதானப்பட்டி; தேனி மாவட்டம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் ரமேஷை போலீசார் தாக்குவது தொடர்பான வீடியோவால் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா உட்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து நேற்று ரமேஷ் வசிக்கும் தெற்கு தெருவைச் சேர்ந்தவர்களிடம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தினார்.

தேவதானப்பட்டி ஆட்டோ டிரைவர் ரமேஷ் 31. ஜன., 14ல் மதுபோதையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தார். இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். எஸ்.ஐ., மணிகண்டன், ரமேைஷ ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கண்டித்து ஜாமினில் விடுவித்தார். திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது போல், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ரமேஷை போலீசார் தாக்கிய வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ பதிவின் அடிப்படையில் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, சிறப்பு எஸ்.ஐ., சுயசம்பு, ஏட்டுக்கள் மாரிச்சாமி, பாண்டி, போலீஸ்காரர் வாலிராஜன் ஆகிய 5 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார்.

நேற்று தேவதானப்பட்டி ஸ்டேஷனில் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர் தலைமையில் விசாரணை நடந்தது. ரமேஷின் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், சதீஷ், தமிழன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் வேல் மணிகண்டன், ஜான் செல்லத்துரை, ஸ்டேஷன் ரைட்டர் ரவி, போலீசாரிடம் விசாரணை நடத்தினார். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடந்தது.

Advertisement