கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்; மறியலில் ஈடுபட்டோரை எச்சரித்த விருதுநகர் எஸ்.பி.,

விருதுநகர்: “மருத்துவமனையில் நீங்கள் மறியல் செய்வதால், -நோயாளிகள் யாரேனும் இறந்து விட்டால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது,” என விருதுநகர் எஸ்.பி., கண்ணன் கடுமையாக எச்சரித்தார்.
அப்போது, இறந்தவர்களின் உறவினர்கள் கடுமையான வார்த்தைகளை பேசியதை அடுத்து, 'இதற்கு மேல ஒழுங்கா இருக்கணும், இல்லேன்னா வேற மாதிரி ஆகிடும்' என்று அவர் பேசியது, தற்போது சர்ச்சையாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியில், கோகுலேஷ் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஜூலை 1ல் வெடிவிபத்து நிகழ்ந்தது.
வெடி விபத்து
இதில், பலியான ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் உடல், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், மீனம்பட்டி மகாலிங்கம், 55, சூலக்கரை வைரமணி 32, மத்தியசேனை லட்சுமி, 22, அனுப்பன்குளம் செல்லப்பாண்டி, சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம், 27, நாகபாண்டி, விருதுநகர் புண்ணியமூர்த்தி ஆகியோரின் உடல்கள், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.
வெடி விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், 'பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, தமிழக அரசு 20 லட்சமும்; ஆலை நிர்வாகம் 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்' எனக்கூறி, அன்று மாலை தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசு அலுவலர்கள், போலீசார் பேச்சு நடத்தியதால் கலைந்து சென்றனர்.
ஆனால், நேற்று முன்தினம் காலை மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் திரண்ட உறவினர்கள், கூடுதல் நிவாரணம் கேட்டு உடலை வாங்க மறுத்தனர். அடுத்ததாக, விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர் செல்லும் ரோட்டில், அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை, போலீசார் கேட்டை பூட்டி தடுத்ததும் வெளியே சென்று மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., கண்ணன், சாத்துார் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேச்சு நடத்தினார். எஸ்.பி., கண்ணன் பேசும் போது, “மறியல் செய்வதால் எந்த பயனும் இல்லை, குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வந்துள்ள அரசு அதிகாரிகளிடம் கோரிக்கையை தெரிவிக்கலாம். மருத்துவமனை வளாகம் என்பதால், மற்ற நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
அதன் பின் மருத்துவமனை வளாகத்திற்குள், பிரேத பரிசோதனை கூடத்திற்கு அருகே உறவினர்கள் திரண்டனர். அவர்களிடம் அரசு அலுவலர்கள், எஸ்.பி., கண்ணன் கூறுகையில், “இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் வைத்திருப்பதால் பயன் இல்லை.“அரசு நிவாரணம் அறிவித்துள்ளது; ஆலை நிர்வாகத்திடம் இருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கைகளை, அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றனர்.
ஆவேசம்
இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாரிடம், 'நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களை இழந்துவிட்டு, 5 லட்சம் ரூபாய் தருகிறோம்; உடலை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினால், எடுத்துச் செல்வீர்களா? நீங்கள் உயிரிழந்தால், உங்களின் வீட்டார் உடலை வாங்கிச் செல்வரா' என்றும் ஆவேசமாக கேட்டனர்.
இதையடுத்து, எஸ்.பி., கண்ணன், “இதுபோன்று, 40 நாட்கள் இருந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை. சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “ரோடு மறியல், நோயாளிகளுக்கு இடையூறு செய்வதால், யாராவது இறந்து விட்டால் யார் பொறுப்பேற்று கொள்வது, மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம்,” என்றார்.
இந்த தருணத்தில் போலீசாருக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், உறவினர்களில் சிலர் தவறான வார்த்தைகளை தெரிவித்ததால் ஆவேசத்தில், 'இதுக்கு மேல ஒழுங்கா இருக்கணும்; கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்' என எஸ்.பி., எச்சரித்தார். அவரின் இந்தப் பேச்சு தான், சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
@block_P@
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அறிக்கை: நிவாரணம் கேட்டு போராடியவர்களை பார்த்து, 'ஒழுங்கா இருக்கணும், இல்லன்னா வேற மாதிரி ஆகிடும்' என, விருதுநகர் எஸ்.பி., மிரட்டியது கண்டிக்கத்தக்கது. வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலை பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத்திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையை கேட்கவும் மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும், தி.மு.க., அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம் வரலாற்று பாசிசம் தோற்று விடும். மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என, தி.மு.க., அரசை எச்சரிக்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார். block_P
@block_P@
மத்திய இணை அமைச்சர் முருகன் அறிக்கை: பட்டாசு ஆலை வெடி விபத்தில் எட்டு பேர் இறந்த நிலையில், அந்தப்பகுதி மக்கள் போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையை ஏவி, அப்பாவி மக்களை மிரட்டுகிறார். 'ஒழுங்கா இருக்கணும், இல்லன்னா வேற மாதிரி ஆகிடும்' என, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை பார்த்து, விருதுநகர் எஸ்.பி., மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
முதல்வரோ, தன் கட்சி படை பரிவாரங்களுடன், விளம்பர, 'ஸ்டண்ட்' அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்.
பட்டாசு ஆலையில் நடக்கும் விபத்துகளை தடுக்க திராணியற்ற முதல்வருக்கு, தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை வைத்து மிரட்ட மட்டும் தெரிகிறது. இந்த செயலுக்கு கடும் கண்டனம். நாடக அரசியலை விட்டு விட்டு, ஸ்டாலின் முதல்வராக செயல்பட முன்வர வேண்டும். தமிழக மக்கள், அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது அதை மட்டும் தான். இல்லையென்றால் ஓட்டு கேட்க வரும் போது, மக்கள் ஓரணியில் திரண்டு, இதே பாணியில் பதில் சொல்வர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.block_P













மேலும்
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்