பா.ஜ., அடுத்த தேசிய தலைவர் யார்: பெண்கள் மூவருக்கு வாய்ப்பு!

55

புதுடில்லி: பா.ஜ., கட்சியின் அடுத்த தேசிய தலைவர் பதவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பா.ஜ., தேசிய தலைவராக, 2020ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அமைச்சர் நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். லோக்சபா தேர்தலை கருதி, நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததை அடுத்து, மத்திய அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவர், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், விரைவில் பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



இந்த முறை கட்சியின் தலைவராக பெண் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கட்சி வட்டாரத்தில் நீண்ட காலமாக பேசப்படுகிறது. அந்த வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்தியில் மூன்று பேருடைய பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி ஆகியோர்தான் அந்த மூவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே பா.ஜ., கட்சியின் தேசிய தலைவராக இருந்துள்ளார். இவர் 2001- 02ல் ஓராண்டு காலம் கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement