ஒரு வாரம் விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர் சுக்லா; என்ன செய்தார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!

3


புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஒரு வாரமாக தங்கி உள்ளார். அவர் விடுமுறை தினத்தில், விண்வெளி நிலையத்தில் இருந்து தனது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார்.


அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'டிராகன்' விண்கலம் வாயிலாக, 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.01 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் ஜூன் 26ம் தேதி இந்திய நேரப்படி, மாலை 4:05 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக சென்றடைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன், 'வெப்கேஸ்ட்' நேரலை வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.


இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இன்றுடன் விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்களை செலவிட்டுள்ள இஸ்ரோ வீரர் சுபான்ஷு, ஆக்சியம் 4 திட்டத்தின் சக உறுப்பினர்களான நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோருடன் இணைந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


விடுமுறை தினத்தில் தனது குடும்பத்தினருடன் சுபான்ஷு சுக்லா பேசிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. அதில், சுபான்ஷு மிதந்து கொண்டிருப்பதை, இளம் பருவ நினைவுகளுடன் ஒப்பிட்டு, அவரது சகோதரி பேசியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள், செல்கள் விண்வெளியில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய நுண் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தில், விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள வீரர்கள் ஏற்கனவே அறிவியல் ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement