மொழியின் பெயரால் வன்முறையை கையில் எடுத்தால் சட்ட நடவடிக்கை: மஹா. முதல்வர் பட்னவிஸ் எச்சரிக்கை

1

மும்பை: மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார்.



மஹாராஷ்டிராவில் அண்மையில் மராத்தி பேசாத உணவக உரிமையாளரை மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அமைப்பினர் அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. தாக்குதலைக் கண்டித்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.


இந் நிலையில், மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எச்சரித்துள்ளார். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது;


நாங்கள் மராத்தி மொழியை மதிக்கிறோம். ஆனால் அதன் பெயரை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க மாட்டோம். நாட்டில் எந்த மொழியையும், அவமரியாதை செய்வதை அனுமதிக்கவே முடியாது.


யாராவது அப்படி வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ஆங்கிலத்தை உயர்வாகவும், ஹிந்தியை தாழ்வான மொழியாகவும் கருதுகின்றனர். இது எப்படிப்பட்ட மனநிலை என்பது எனக்கு தெரியவில்லை.


இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.

Advertisement