கேரளாவில் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு

திருவனந்தபுரம்: கேரளாவில் அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பிந்து,52, என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அலினா,11, அமல் பிரதீப்,20, ஜினு சாஜி, 38, ஆகியோர் படுகாயமடைந்தனர்.


அரசு கட்டடம் இடிந்து பெண் உயிரிழந்தது கொலைக்கு சமம் என்று பா.ஜ.,வும், காங்கிரஸூம் குற்றம்சாட்டி வருகின்றன.


இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் வீணா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நிலவியது. இதனால், தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement