உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி

3


மும்பை: '' உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்,'' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.


மஹாராஷ்டிராவில், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழி கற்பிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து ஹிந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர்.


ஆனால், மாநில அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. இதனையடுத்து இந்த பேரணியை வெற்றி பேரணியாக நடத்தப்படும் என உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே அறிவித்தனர்.



இன்று நடந்த பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, '' சிவசேனா தலைவர் பால் தாக்கரே செய்ய முடியாததை பட்னவிஸ் செய்துவிட்டார். என்னையையும், உத்தவையும் ஒன்று சேர்த்துவிட்டார்,'' எனக்கூறினார். மேலும் இருவரும் மாநில அரசை கடுமையாக விமர்சித்து பேசினர்.


இதற்கு பதிலளித்து பட்னவிஸ் கூறியதாவது: உங்களை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார். இருவரும் வெற்றி பேரணி நடத்துவதாக கூறினார்கள். ஆனால், அது துக்க வீட்டில் பெண்கள் அழுவதை போல் இருந்தது. மொழி கொள்கையை பற்றி பேசாமல், மாநில அரசு கவிழ்வதை பற்றியும், மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி மட்டுமே பேசினர். மராத்தி மக்களுக்கான உரிமையை நாங்கள் வழங்கினோம். இதனால், அவர்களுக்கு எங்கள் மீது பொறாமை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement