மாலியில் கடத்தப்பட்ட 3 இந்தியர்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது

கஞ்சம்: மாலியில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று இந்தியர்களில், ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எனினும், மற்ற இருவரின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ நிலைகள் மீது, அல் - குவைதாவின் துணை அமைப்பு சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1ம் தேதி, அங்குள்ள சிமென்ட் தொழிற்சாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பணியாற்றி வந்த நம் நாட்டைச் சேர்ந்த மூன்று ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

கடத்தப்பட்ட மூன்று இந்தியர்களில், ஒருவரின் அடையாளம் மட்டும் தெரியவந்துஉள்ளது. அவர், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 28, என கண்டறியப்பட்டுள்ளது.

இவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, 'ப்ளூ ஸ்டார் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; ஆறு மாதங்களுக்கு முன் மாலிக்கு வெங்கட்ராமனை, அந்நிறுவனம் அனுப்பியது.

இந்நிலையில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் வசிக்கும் வெங்கட்ராமனின் தாய் நரசம்மா, 'வெளிநாட்டில் உள்ள என் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை' என போலீசில் புகார் அளித்த பின், மாலியில் அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது.

மூன்று பேரையும் மீட்கும் பணியில், நம் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

Advertisement