பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்

10


சென்னை: பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணியை நீக்கி, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.


பா.ம.க.,வில் அப்பா -மகன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதியவர்களை நியமிப்பது என, போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் அன்பு மணி பக்கம் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமித்தார்.

பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் பக்கம் உள்ளனர். சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் அன்புமணி பக்கம் உள்ளனர். தனக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளை, கடந்த 2ம் தேதி கட்சியிலிருந்து அன்புமணி நீக்கினார்.



இதை ஏற்காத ராமதாஸ், 'பா.ம.க.,விலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. இணை பொதுச்செயலர், நிர்வாகக் குழு உறுப்பினர், எம்.எல்.ஏ., ஆகிய பொறுப்புகளில் அருள் தொடர்வார்' என அறிவித்தார்.


இந்நிலையில், இன்று (ஜூலை 06) பா.ம.க., புதிய நிர்வாக குழுவை ராமதாஸ் அறிவித்தார். குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 21 புதிய பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.


ராமதாசுடன், ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், அருள்மொழி உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். தற்போது, பா.ம.க.,வில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

Advertisement