கால்வாயில் கழிவுநீர் தேக்கம் சுகாதார சீர்கேடு அபாயம்

மதுராந்தகம்,:சிலாவட்டம் ஊராட்சி அய்யனார் கோவில் நகர் பகுதியில், கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோவில் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு, பாரதியார் தெரு, திருவள்ளுவர் தெரு பகுதியில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி பொறியாளர்கள், உரிய ஆய்வு செய்யாமல், பள்ளமான பகுதியில் மழை நீர் கால்வாய் அமைத்து உள்ளனர்.

அதில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வெளியே செல்லும் வகையில் வழி ஏற்படுத்தாமல் உள்ளனர்.

இதையடுத்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதி குழந்தைகள், தெருவில் விளையாடும் போது கால்வாயில் தவறி விழும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பொது மக்கள் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறும் வகையில், கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement