சிரவை ஆதீனம் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம்

கோவை:'சிரவை ஆதீனம் மீது தொடர்ந்த பொய் வழக்கை ரத்து செய்யாவிட்டால், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, கொங்கு மண்டல அருளாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், ஹிந்து முன்னணி, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில், மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆதீனம் மீது வழக்கு பதிந்ததற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி, அகில உலக ஆன்மிக பேரவை சார்பில் கொங்கு மண்டல அருளாளர்கள் ஆலோசனை கூட்டம், பேரூரில் நேற்று நடந்தது.

அகில உலக ஆன்மிக பேரவை பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள் தலைமை வகித்தார்.

'ஆதீனம் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

'இதை வலியுறுத்தி, 7ம் தேதி, கோவை மாநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

'இன்னும் ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணாவிட்டால், மாநிலம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

'வரும் காலங்களில், இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க, முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்படும்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆதீனங்கள், அருளாளர்கள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisement