சி.எஸ்.ஆர்., முறை ஒழிக்கணும் என்கிறார் பொன் மாணிக்கவேல்

கோவை,:'போலீஸ் ஸ்டேஷன்களில் சி.எஸ்.ஆர்., நடைமுறை ஒழிக்கப்பட்டால், சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்,'' என, ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை, ஈச்சனாரி அருகே நேற்று நடந்த உழவர் தின பேரணியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

போலீசாருக்கு அணுகுமுறை முக்கியம். தந்தை, மகன் இறந்த, தற்போது அஜித்குமார் மரணம் என, எதற்குமே எந்த முதல்வரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

தற்போது நரி போல போலீசாரை கடித்து குதறுகின்றனர். போலீஸ் துறை, தடம் புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. போலீசாரின் செயல்பாடுகள் மிக மோசம்.

போலீஸ் ஸ்டேஷனில் எது நடந்தாலும் கோர்ட்டிற்கு தெரியாமல் நடக்கக் கூடாது. சி.எஸ்.ஆர்., நடைமுறையை ஒழிக்க கோர்ட் முன் வர வேண்டும். ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ரியல் எஸ்டேட்டில் இறங்கி விட்டனர். அவர்களை எதிர்ப்பவர்களை மிரட்ட ஆரம்பிக்கப்பட்டதே தனிப்படை.

சி.எஸ்.ஆர்., நடைமுறையை ஒழித்தால் இத்தகைய சம்பவங்கள் ஒழியும். கோயிலுக்குள் கொலை நடக்கிறது; அறநிலைய துறையினர் எங்கே சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் ரிதன்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியவர், ''ரிதன்யா வழக்கை டி.எஸ்.பி., விசாரித்துக் கொண்டிருக்கிறார். எஸ்.பி., நேரடியாக விசாரிக்க வேண்டும்.

''தமிழகத்தில் 38 எஸ்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் நேரடியாகவே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு தலையிடலாம். அதுபோல் யாரும் செய்வதில்லை,'' என்றார்.

Advertisement