குழந்தை பெறும் பள்ளி மாணவியருக்கு உதவி தொகை அளிக்கிறது ரஷ்யா


வேல்ஸ்:ரஷ்யாவின் சில பகுதிகளில், பள்ளி மாணவியர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது.

பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைய துவங்கி உள்ளது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனாவே தற்போது பின்தங்கிவிட்டது.



சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கடந்தாண்டு முதல் பாதியில் ரஷ்யாவில் வெறும், 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. 25 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு என ரஷ்ய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவின், 10 மாகாணங்களில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவியர் குழந்தை பெற்று வளர்ப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித் தொகையை அந்நாட்டு அரசு வழங்குகிறது. 43 சதவீத ரஷ்யர்கள் இந்தக் கொள்கையை ஆதரிக்கின்றனர்.



ரஷ்யா -- உக்ரைன் போரும், மக்கள் தொகை விகிதத்தை குறைத்துள்ளது. போரால், படித்த ரஷ்யர்களில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

Advertisement