கணியூரில் 500 ஏக்கரில் பன்முக தளவாட பூங்கா; ! 'மாஸ்டர் பிளான்' அறிக்கையில் முன்மொழிவு

கோவையின் எதிர்கால வளர்ச்சியை மதிப்பீடு செய்து, 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்பட்டுள்ளது. அதில், இனி வரும் காலங்களில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமென முன்மொழியப்பட்டு உள்ளன. குறிப்பாக, கணியூரில், 500 ஏக்கரில் பன்முக தளவாட பூங்கா அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


நகர வளர்ச்சியை கணக்கிட்டு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 10 ஆண்டுக்கு ஒருமுறை நகர ஊரமைப்புத்துறையால், முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்படும். கோவையில், 1994க்கு பின், 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்பட்டது. அதன்பின், பல்வேறு தடவை அரசு துறையினர், தொழில்துறையினருடன் ஆலோசித்தனர். இறுதி வடிவம் கொடுக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.


சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரமாக கோவை உருவெடுத்திருப்பதால், 'மாஸ்டர் பிளான்' முக்கியத்துவத்தை, தொழில்துறையினர், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.

'மாஸ்டர் பிளான்' வெளியீடு



இதையடுத்து, 2041ல் எதிர்பார்க்கும் மக்கள் தொகையை தோராயமாக கணக்கிட்டு, 2024 பிப்., 11ல் பொதுமக்கள் பார்வைக்கு வரைவு 'மாஸ்டர் பிளான்' வெளியிடப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து ஆலோசனை கேட்கப்பட்டது; 3,500 மனுக்கள் வந்ததால் நகர ஊரமைப்புத் துறை திணறியது. ஒவ்வொரு மனுவையும் பரிசீலித்து தீர்வு காண நாட்கள் இழுத்தது.



திட்டச்சாலைகளை நீக்குவது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், மாநகராட்சியோடு ஆலோசித்து, கட்டுமானங்கள் இல்லாத மற்றும் கட்டுமானத்துக்கு அனுமதி கொடுக்காமல் உள்ள திட்டச்சாலைகளை கைவிடுவதென முடிவெடுக்கப்பட்டது.


கடந்த மார்ச் மாதம் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது; அதற்குள் திருத்தங்கள்
செய்ய முடியாததால் மேலும் இரு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இறுதி செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். கோவை உள்ளூர் திட்ட குழுமத்தில், மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், பரப்பு, 1,531.57 சதுர கி.மீ., என விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிக்கும்



கோவை உள்ளூர் திட்ட குழும பகுதியில், 1991ல் இருந்த, 15.68 லட்சம் மக்கள் தொகை, 2041க்குள், 58.25 லட்சமாக உயருமென கணிக்கப்பட்டுள்ளது. இது, நகரமயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது. எனவே, எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டமிட்ட உள்கட்டமைப்பு மற்றும் நிலையான நில பயன்பாட்டை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாநகராட்சி பகுதியில் மக்களின் அடர்த்தி அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 2011ல் ஹெக்டேருக்கு, 61 நபர்களாக இருந்த அடர்த்தி, 2041க்குள், 151 ஆக உயர வாய்ப்பிருப்பதாக கருதுகிறது.



எனவே, 'மாஸ்டர் பிளான்' அறிக்கையில், நகர வளர்ச்சிக்கேற்ப என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமென, நகர ஊரமைப்பு துறையால், தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்மொழிவுகள் என்னென்ன



n சத்தி புறவழிச்சாலை, குரும்பபாளையம் - பெரியநாயக்கன்பாளையம் இணைப்பு சாலை, உள்ளூர் இணைப்பை மேம்படுத்த, 36 கி.மீ., நீளத்துக்கு சிறிய சாலை பிரிவுகள், மதுக்கரை முதல் கூடலுார் வரை மேற்குப்புறவழிச்சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் காரணம்பேட்டை வரை கிழக்குப்புறவழிச்சாலை, மதுக்கரை முதல் செலக்கரிச்சல் வரை தெற்கு புறவழிச்சாலை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.



திருச்சி ரோடு, பாலக்காடு ரோடு, சத்தி ரோடு, எல் அண்டு டி பைபாஸ் அகலப்படுத்த வேண்டும். எதிர்கால வளர்ச்சிக்கு அவிநாசி - சூலுார் இணைப்பு மற்றும் பாப்பம்பட்டி சாலை போன்ற புறநகர் இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டும். மேலும், நெரிசல் மிகுந்த சந்திப்புகளை மேம்படுத்த வேண்டும்.


* உள்ளூர் திட்ட குழும பகுதியில், அதிவிரைவு போக்குவரத்து அமைப்பு உருவாக்க, 143.3 கி.மீ., நீளமுள்ள சாலை முன்மொழியப்பட்டு உள்ளது. அவிநாசி சாலை, சத்தி சாலைகள் - 45.8 கி.மீ., பிளீச்சி, இருகூர் மற்றும் காளம்பாளையம் வரையிலான நீட்டிப்பு மற்றும் எல் அண்டு டி பைபாஸ் - 56 கி.மீ.,


n தற்போது, 900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 3,000 எண்ணிக்கையில் இயக்க வேண்டும்.


பல்வகை போக்குவரத்து மையமாக நீலாம்பூரிலும், வடக்கு நோக்கிச் செல்லும் வழித்தடங்களுக்கு விளாங்குறிச்சியிலும், தெற்கு நோக்கிச் செல்லும் வழித்தடங்களுக்கு செட்டிபாளையத்திலும் பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்க வேண்டும். புறநகரில் ஐந்து 'டெப்போ' உருவாக்க வேண்டும்.


n புறநகர் போக்குவரத்தை சீரமைக்க, இருகூர், பீளமேடு, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த வேண்டும். சேலம், கரூர், திண்டுக்கல் வரை மண்டல ரயில் இணைப்பு, சேலத்துக்கு அதிவேக மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு வழித்தடம் முன்மொழியப்பட்டு உள்ளது.

n சித்தாபுதுார், ஏ.டி.டி., காலனி, பிரகாசம், ரேஸ்கோர்ஸ், டாக்டர் கிருஷ்ணசாமி முதலியார் சாலை மற்றும் கோபாலபுரம் பகுதியில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் நடைமுறை வேண்டும். காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் போன்ற இடங்களில், 'மல்டிலெவல் பார்க்கிங்' கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.


n கணியூரில், 500 ஏக்கரில் பன்முக தளவாட பூங்கா அமைக்க வேண்டும். இது, ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு மற்றும் சுங்க அனுமதி வசதியுடன் அமைய வேண்டும்.



n பெரியநாயக்கன்பாளையம், சூலுார் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். 2041க்குள், உத்தேசமாக, 358 மேல்நிலைப்பள்ளிகள், 316 துவக்கப்பள்ளிகள் தேவைப்படும். இதற்கு, 773 ஹெக்டேர் நிலம் தேவை. உயர்கல்விக்கு தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவு செய்யும்.


n கோவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு தலா ஒன்று வீதம் புதிதாக வட்டார மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்; 23 ஹெக்டேர் நிலம் தேவைப்படும்.


n 2041க்குள் 12 போலீஸ் ஸ்டேஷன்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்; 18 ஹெக்டேர் நிலம் தேவை. மாநகராட்சி பகுதியில் - 3, சூலுார் வட்டாரத்தில் - 3, பெரியநாயக்கன்பாளையம் - 2, மதுக்கரை, எஸ்.எஸ்.குளம், அன்னுார் வட்டாரத்தில் தலா ஒன்று வீதம் அமைக்க வேண்டும். இதேபோல், 19 தீயணைப்பு நிலையங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்.
இதேபோல், மின்சாரம், குடிநீர் வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குப்பை மேலாண்மை, சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள், மாஸ்டர் பிளானில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

@block_B@

காரணிகள்

கோவையில் வட்டச்சாலை இல்லாததால், அவிநாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோட்டையை அதிகமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எல் அண்டு டி பைபாஸ் இரு வழிச்சாலையாக உள்ளது. இது தற்போதைய மற்றும் எதிர்கால போக்குவரத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை. 98 சதவீத சாலைகளில் நடைபாதைகள் இல்லை. பிரத்யேகமாக சைக்கிள் தடங்களும் இல்லை. இது, மோட்டார் அல்லாத போக்குவரத்து பயனாளர்களை ஆபத்துக்குள்ளாக்குகிறது. சாலை விபத்துகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றம் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பிரிக்கப்படாத சாலைகள், சமிக்ஞை வசதி, பாதசாரி கடக்கும் இடங்கள் இல்லாதது, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் விபத்துகளுக்கு காரணிகளாக இருக்கின்றன என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.block_B

@block_B@

'கிரெடாய்' வரவேற்பு

'கிரெடாய்' தமிழக தலைவர் ஹபிப் அறிக்கையில், 'தமிழகத்தின் மிக வேகமாக வளரும் நகரான கோவையின் அடுத்த, 20 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், இப்பகுதியின் போக்குவரத்தை மேம்படுத்தி, நெருக்கடியைக் குறைக்கும். உற்பத்தித்துறை, ஐ.டி., கல்வி நிறுவனங்கள் வலுவடையும். ரூ.56 ஆயிரம் கோடியில் அடுத்த, 16 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. நகரமயமாதல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் என பல்வேறு தரப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அரசோடு இணைந்து செயல்பட கிரெடாய் தயாராக உள்ளது' என, தெரிவித்துள்ளார்.block_B

@block_B@

தொலைநோக்கு திட்டங்கள்

இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி லுந்த் அறிக்கையில், 'கோவைக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் வெளியிட்டதை, இந்திய தொழில் வர்த்தக சபை வரவேற்றுள்ளது. வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சி, வீட்டு வசதி திட்டங்கள், சுற்றுச்சூழல் இயற்கை வள பாதுகாப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 'கோயம்புத்துார் மாஸ்டர் பிளான் 2041' என்பது, புவியியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட கோவைக்கான தொலைநோக்கு திட்டம். பசுமைத்திட்டம், தொழில்துறைக்கு முக்கிய இடத்தை கொடுத்துள்ளது. அரசின் கொள்கைகளுடன் ஒருங்கிணைத்துள்ளது, வரவேற்கத்தக்கது' என, தெரிவித்துள்ளார்.block_B

Advertisement