மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

கோவை : மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

சிங்காநல்லுார் பகுதியை சேர்ந்தவர் யோகானந்தன், 31. கடந்த, 1ம் தேதி திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இரவு, 11:00 மணியளவில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சைக்காக கே.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலையில் பலத்த காயத்தோடு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 4ம் தேதி மதியம், 2:00 மணிக்கு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர்.

மூளைச்சாவு அடைந்தவரின் சகோதரி சகானா, அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். இவர், உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து கூறி குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்றார். இதைத்தொடர்ந்து, யோகானந்தன் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை வாயிலாக எடுக்கப்பட்டது.

ஒரு சிறுநீரகம், கல்லீரல் கே.ஜி., மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், இதயம் ஜி.கே.என்.எம்., மருத்துவமனைக்கும் அரசு விதிமுறைப்படி வழங்கப்பட்டது. இவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, இறுதி சடங்குக்கு மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement