தொழில் நகரை அச்சுறுத்தும் 'எய்ட்ஸ்' நோய்!

''தொழில் நகரமான திருப்பூரில், உள்ளூர் மட்டுமின்றி, பீகார், அசாம், ஜார்கண்ட், உ.பி., உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றுகின்றனர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம், ''திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 8 முதல், 10 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகின்றனர்; அவர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார், தன்னார்வ அமைப்பின் நிர்வாகி சங்கரநாராயணன்.

அந்த அடிப்படையில், உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயில் இருந்து தப்பிப்பதற்கு உரிய விழிப்புணர்வை மிக அதி களவில் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.

எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்று பரவல் குறித்து கண்காணிப்பில், திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி., மையம் (Anti retroviral Therapy) செயல்படுகிறது.

மருத்துவர்கள் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தன்னார்வ அமைப் பினரின் உதவியுடன், இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்கள், திருநங்கையர் மற்றும் 'டிரக்கர்' எனப்படும் லாரி ஓட்டுனர்களுக்கு தனித்தனியாக, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, நோய் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

யாருக்கெல்லாம்பரிசோதனை



மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவோருக்கு, எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வோர், ரத்த தானம் வழங்குவோர், கர்ப்பிணிகள், அவர்களது கணவர்களுக்கும் பரிசோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும், எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதித்தோர் விவரம் அறியப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக மாநிலம் முழுக்க எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவல் அதிகரித்து வருவதாக, தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு, ஓரினச்சேர்க்கை முக்கிய காரணமாக உள்ளது என, பரிசோதனை முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது.

ஓரினச்சேர்க்கையை தடுக்க, சட்டத்தில் உரிமையில்லை என்ற சூழலில், ஆணுறை போன்ற நோய் தடுப்பு சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை மட்டுமே வழங்கி வருகிறோம்; தனி மனித ஒழுக்கமே, நோயை அண்ட விடாமல் செய்யும்.

சங்கிலித்தொடர்கண்காணிப்பு



திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 'நோய் தடுப்பு நடவடிக்கையில் கவனமாக இருக்க வேண்டும்; ஆணுறை பயன்படுத்த வேண்டும்' என்ற விழிப்புணர்வை அழுத்தமாக வலியுறுத்தி வருகிறோம்.

தாராபுரம், உடுமலைபேட்டை, பல்லடம், காங்கயம், அவிநாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'இணைப்பு ஏ.ஆர்.டி.,' மையங்கள் செயல்படுகின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, திருப்பூர் ஏ.ஆர்.டி., மையத்தில் சிகிச்சை துவக்கப்படுகிறது.

நோயாளிகள் சரியான முறையில் மருந்து, மாத்திரை உட்கொண்டு, கட்டுப்பாடுடன் இருக்கும் பட்சத்தில், அவரவர் ஊரில் உள்ள இணைப்பு ஏ.ஆர்.டி., மையங்களில், சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

குறைந்ததுஎண்ணிக்கை



இத்தகைய முயற்சியின் பலனாக திருப்பூரில், எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கடந்த 2023 -24ம் ஆண்டில், எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, 289 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு, (2024 -25), அது, 245ஆக குறைந்திருக்கிறது. இருப்பினும், புதிது புதிதாக நோயாளிகள் உருவாவதை தடுக்கும் நோக்கில் களப்பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திருப்பூரில், எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

கடந்த 2023 -24ம் ஆண்டில், எய்ட்ஸ்

நோயாளிகளின் எண்ணிக்கை, 289 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு, (2024 -25), அது, 245ஆக குறைந்திருக்கிறது. இருப்பினும், புதிது புதிதாக நோயாளிகள் உருவாவதை தடுக்கும் நோக்கில் களப்பணியாற்றி வருகிறோம்

Advertisement