நத்தத்திலிருந்து சென்னைக்கு மீண்டும் தேவை அரசு பஸ் சேவை

நத்தம்: -நத்தத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைகின்றனர். மீண்டும் சென்னைக்கு இச்சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னைக்கு தினம் இரவு 8:00 மணிக்கு நத்தம் அரசு போக்குவரத்து பணிமனை மூலம் 2007 முதல் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கொட்டாம்பட்டி, திருச்சி வழியாக சென்னை சென்று வந்தது. இதையடுத்து நத்தம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இச்சேவை மாற்றப்பட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின் நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கியது. கொரோனா முடக்கத்திற்கு பின் திடீரென இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கி பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை இந்த சேவை தொடங்கவில்லை. இதனால் தொடர் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் மட்டும் நத்தத்திலிருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அதுவும் சமீப காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு பஸ்சில் சென்னை செல்ல கட்டணம் ரூ. 430 ஆக இருந்த நிலையில் தனியார் பஸ்களில் ரூ.900,ரூ.1500 வரை கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். விசேஷ தினங்களில் ரூ. 2000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் சென்னை பயணிக்கும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க மீண்டும் நத்தத்திலிருந்து சென்னைக்கு அரசு பஸ் சேவையை தொடங்க வேண்டும்.
.......
தேவையற்ற அலைச்சல்
சோ.ஆனந்த கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர், பா.ஜ., ஐடி பிரிவு, கோபால்பட்டி: 10 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் சென்னை அரசு பஸ் சேவை இருந்தது. இதனை வர்த்தகர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினர். சில ஆண்டுகளாக இச்சேவை நிறுத்தப்பட்டதால் மதுரை, திண்டுக்கல் சென்று சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்,செலவுகள் ஏற்படுகிறது.
.............
தேவை நடவடிக்கை
சி.ஆர்.ஹரிஹரன், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர், வேம்பார்பட்டி: தனியார் பஸ்கள் அரசு பஸ்சை விட மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னை செல்ல பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது அரசு பஸ்களை காட்டிலும் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்து மக்கள் ஏமாற்றுகின்றனர். இதன் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
...............
நிரந்தரம் இல்லாத நிலை
வி.பாலகணேசன், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன், கம்பிளியம்பட்டி : தொடர் விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் அரசு போக்குவரத்து சேவை எப்போதாவது உள்ளது. எல்லா நாட்களில் செயல்படும் என்ற நிரந்தரம் இல்லாத நிலையில் உள்ளதால் பயணிகள் இதை நம்பி பயணிக்க தயங்குகின்றனர். நத்தம் தொழில் வளர்ச்சி மிக்க நகரமாக வளர்ந்து வருவதால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து தினசரி போக்குவரத்து சேவையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
........
மேலும்
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!