கண்மாய் கரையோரம் ரூ.1.28 கோடியில் ரோடு அமைக்கும் பணி துவக்கம் ' தினமலர் ' செய்தி எதிரொலி

போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து சங்கரப்பன் கண்மாய் முடியும் வரை 2 கி.மீ.,.தூரம் ரூ.1.28 கோடி செலவில் ரோடு அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளன.

மேலச்சொக்கநாதபுரத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சங்கரப்பன் கண்மாய். குரங்கணி பகுதியில் பெய்யும் மழை நீர் கொட்டகுடி ஆறு வழியாக பங்காருசாமி நாயக்கர் கண்மாய்க்கு வந்தடைகிறது. இக்கண்மாய் நிரம்பி அருகே உள்ள சங்கரப்பன் கண்மாய்க்கு நீர் வருகிறது. இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் 1300 ஏக்கருக்கு மேல் நேரடியாகவும், 400 ஏக்கர் மறைமுகமாக பாசன வசதி பெறும். கரையை சுற்றி கருங்கற்களால் ஆன தடுப்புச்சுவர், நீர்வரத்து ஓடை பாலம் இன்றி நீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து கண்மாய் முடியும் வரை 2 கி.மீ. தூரம் ரோடு வசதி இல்லை.

இதனால் மழைக் காலங்களில் டூவீலர், ஆட்டோ, டிராக்டரில் விளை பொருட்கள், தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் கண்மாய் காப்போம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியால் போடி மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.28 கோடி செலவில் மேலச்சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருந்து கண்மாய் முடியும் வரை 2 கி.மீ., தூரம் ரோடு அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளன.

Advertisement