விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பேரணி

கள்ளக்குறிச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சியில் நடந்த பேரணிக்கு, கரும்பு விவசாயிகள் அணி மாநில செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அழகேசன், ராஜீவ் காந்தி முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன், 50 சதவீத தொகை சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், விவசாயிகள் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தல், நெல் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.6 ஆயிரம், நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும்.

வேளாண் உரிமை மின்சார திட்டத்தை ரத்து செய்ய முடியாத வகையில் தனி சட்டம் இயற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாராயணசாமி தலைமையில் உரிமைக்காக போராடி மரணம் அடைந்த உழவர்களுக்கு வணக்கம் செலுத்த பேரணி நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மந்தைவெளி வரை பேரணி நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர்கள் அர்ச்சுனன், அருணாசலம், மாரி, செந்தில், ராஜ்குமார், செந்தில்குமார், துணை செயலாளர் ராமசாமி மற்றம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement