டில்லி உஷ்ஷ்ஷ்: 'ரிட்டையர்' ஆகிறாரா ஸ்மிருதி?

13

புதுடில்லி: பா.ஜ., வட்டாரங்களில் ஒரு முன்னாள் அமைச்சர் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. 'அதிரடியாக செயல்பட்ட அந்த அரசியல்வாதி, அரசியலுக்கு முழுக்கு போடப் போகிறாரா...' என, ஆச்சர்யப்படுகின்றனர். அவர் வேறு யாருமல்ல... அந்த அரசியல்வாதி, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி!

கடந்த 2019 பார்லிமென்ட் தேர்தலில் ராகுலை தோற்கடித்து, அமேதி தொகுதி எம்.பி., யான இவர், மத்திய அமைச்சராகவும் ஆனார். ஆனால், 2024ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரசிடம் தோற்றுப் போனார்.

எம்.பி.,யாவதற்கு முன், தொலைக்காட்சி நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். இவர் நடித்த ஹிந்தி சீரியல், 'க்யூங்கி சாஸ் பி கபி பஹூ தி' சக்கை போடு போட்டது. அமைச்சரான பின் நடிப்பதை ஓரங்கட்டினார்; இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

'க்யூங்கி சாஸ் பி கபி பஹூ தி' என்கிற இந்த ஹிந்தி சீரியலின் இரண்டாம் பாகம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர்; அதில் மீண்டும் நடிக்கிறாராம் ஸ்மிருதி. இதற்காக மும்பையில் வீடு வாங்கி, அங்கு தங்கி, 'டிவி' சீரியலில் நடிக்கப் போகிறாராம்.

'அரசியலில் இனிமேல் நமக்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதால், சீரியலில் நடிப்பதே நல்லது' என்கிற முடிவிற்கு ஸ்மிருதி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

'பார்லிமென்டிலும், வெளியிலும் காங்கிரசை கடுமையாக விமர்சித்த இவர், இப்போது அரசியலிலிருந்து விலகுகிறாரே...' என, பா.ஜ.,வினர் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement