மஹாராஷ்டிரா பா.ஜ., கூட்டணியில் குழப்பம்

6


மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும், துணை முதல்வராக உள்ளனர்.


சட்டசபை தேர்தலில் காங்., கூட்டணியை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது, பா.ஜ., கூட்டணி. ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது தினமும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி தவிக்கிறது, பா.ஜ., கூட்டணி.


பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமன்றி, கூட்டணி எம்.எல்.ஏ.,க்களும் பல விஷயங்களில் அரசை விமர்சிக்கின்றனர். இந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பசையுள்ள பதவிகள் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில், தங்கள் இஷ்டப்படி மீடியாவில் பேச ஆரம்பித்துவிட்டனர். உடனே, இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, முதல்வர் பட்னவிஸை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டன.


நிலைமை மோசமாவதை உணர்ந்து கொண்ட முதல்வர், சமீபத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தை தன் வீட்டில் கூட்டி, 'இனிமேல் நம் அரசு குறித்து, உங்கள் கருத்துக்களை வெளியே பேசாதீர்கள்.


நீங்கள் பேசுவதை, எதிர்க்கட்சிகள் பெரிதாக்கி, பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உங்களுடைய ஆதங்கத்தை எங்களிடம் சொல்லுங்கள்; எதற்காக மீடியாவிற்கு செல்கிறீர்கள்?' என, பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.


இந்த கூட்டத்தில் துணை முதல்வர்களும் பங்கேற்றனராம். எப்போதுமே பேசுகிற அரசியல்வாதிகள் வாய் சும்மா இருக்குமா?

Advertisement