கைது செய்யப்பட்ட போலீசாரிடம் மதுரை சிறையில் விசாரணை

மதுரை: திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கைதான போலீசாரிடம் மதுரை மத்திய சிறையில் மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி கோயில் காவலாளி அஜித்குமார் 29, பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, போலீசார் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித்குமார் இறந்தது குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.ஜி.,க்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் நேற்றுமுன்தினம் மனிதஉரிமை கமிஷன் உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அஜித்குமார் இறந்த வழக்கில் கைதான போலீசாரிடமும் நடந்த விபரங்களை கேட்டறிந்து, 'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிறை வளாகம், பெண்கள் சிறையில் ஆய்வு செய்தார். சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உடனிருந்தார்.

போலீசார் கூறுகையில், ''ஒவ்வொரு மாதமும் கண்ணதாசன் மதுரை சர்க்யூட் ஹவுசில் மனிதஉரிமை மீறல் புகார் குறித்து விசாரிப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மதுரை சிறை கைதிகளிடம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என நேரில் விசாரிப்பார். அந்த வகையில் நேற்றுமுன்தினம் விசாரித்தார்'' என்றனர்.

Advertisement